தூத்துக்குடியில் தூத்துக்குடி எக்ஸலண்ட் டேக்வாண்டோ அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற மாவட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் 125-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் – ஸ்ரீகுமரன் தங்க மாளிகை வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேஷன் ஊக்குவிப்பாகவும், இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்கம் இணைப்பாகவும் செயல்பட்டன.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கியோருகி மற்றும் பூம்சே பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். அவருடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் என்.ஏ. ஜெயரத்தின ராஜன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் டாக்டர் எஸ். கண்ணதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போட்டியை திருநெல்வேலி மாவட்ட டேக்வாண்டோ சங்க செயலாளரும், தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க செயற்குழு உறுப்பினருமான என். ரவீந்திரன் ஒருங்கிணைத்தார். தூத்துக்குடி எக்ஸலண்ட் டேக்வாண்டோ சங்கத்தின் தலைவர் பி. கோபால கிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் எஃப். ஜோசப் ஆண்டனி பியோ ஜெஃப்ரிஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க பொதுச் செயலாளரும், 8-வது டான் கிராண்ட் மாஸ்டருமான பி. செல்வமணி, தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்கத் தலைவர் மற்றும் டேக்வாண்டோ ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா தலைவர் டாக்டர் இஷாரி கே. கணேஷ் ஆகியோர் போட்டிக்கு ஆதரவு வழங்கினர்.
தொடக்க நிகழ்ச்சியில் தொழிலதிபர் ராமச்சந்திரன், பைனான்ஸ் இஸ்மாயில் பாய், ஜெய் ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் திருமதி சுவாதிகா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டி, டேக்வாண்டோ விளையாட்டில் மாணவ, மாணவிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும், அடுத்த கட்ட போட்டிகளுக்கான வீரர்களை உருவாக்குவதற்கும் பயனுள்ளதாக அமைந்தது.