தூத்துக்குடியில் தி சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் புத்தகத்திருவிழா ஆக.27 முதல் செப்.6 வரை நடக்கிறது. மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கவும், அறிவுத் தேடலை ஊக்குவிக்கவும், புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும் இந்த புத்தகத்திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள தி சென்னை சில்க்ஸ் வளாகத்தில் நடைபெறும் இத்திருவிழாவில் 25 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10 ஆயிரம் தலைப்புகளில் ஒரு லட்சம் புத்தகங்கள் காட்சிப் படுத்தப்பட உள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப் படுகிறது. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.



மாணவர்களுக்கு போட்டிகள்



புத்தகத்திருவிழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவியர் களின் படைப்பாற்றல், சிந்தனைத்திறன், தமிழ் மொழித்திறன் மற்றும் வாசிப்பு ஆர்வத்தை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.



1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 'நான் விரும்பும் ஓவியம்' என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும், 5 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 'வாசிப்பும் வாழ்க்கையும்' என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியும் நடக்கிறது.
மேலும், திருக்குறள் எழுதும் போட்டி மற்றும் 'உங்கள் கற்பனைக் கதை' என்ற தலைப்பில் கதை எழுதும் போட்டியும் நடத்தப்படுகின்றன.



போட்டிகள் தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கின்றன. போட்டி களில் பங்கேற்க அனுமதி இலவசம்.



தொடக்க விழா



புத்தகத்திருவிழா தொடக்க விழா ஆக.27 காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இதில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, ஐ.ஏ.எஸ்., மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று புத்தகத்திருவிழாவை தொடங்கி வைக்க உள்ளனர்.



இதுகுறித்து தூத்துக்குடியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தி சென்னை சில்க்ஸ் மேலாளர்கள் பாண்டி, ராஜா ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க செயலர் ராஜபாண்டியன், தலைவர் ரவி வர்மா ஆகியோர் உடனிருந்தனர்.



புத்தகத்திருவிழா தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று புத்தகங்களை வாங்கி வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டனர்.