தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகம் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து குறைந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பால் கிடைக்காமல் ஆவின் முகவர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே பல்வேறு இடங்களில் வாக்குவாதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் பால், நெய், ஐஸ்கிரீம், பிஸ்கட், பன்னீர், பட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு, சொசைட்டிகள் மற்றும் முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேவையான ஆவின் பால், திருநெல்வேலி ரெட்டியார் பட்டியில் உள்ள பால் உற்பத்தி நிலையத்திலிருந்து கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 17 ஆயிரம் லிட்டர் பால் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது அது சுமார் 12 ஆயிரம் லிட்டராக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் சுமார் 3 ஆயிரம் லிட்டருக்கும் மேலாக பால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஆவின் முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆவின் சார்பில் நைஸ், டிலைட், ஆரஞ்சு என மூன்று வகையான பால் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ஆரஞ்சு நிற பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேட்மாநகர் அருகே தூத்துக்குடி மாவட்டத்திற்கென பால் மற்றும் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு, கடந்த ஆட்சிக் காலத்தின் இறுதியில் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பல மாதங்கள் கடந்தும் அந்த தொழிற்சாலை முழுமையான உற்பத்தியை தொடங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
பால் ஒதுக்கீடு பாதியாக குறைப்பு
இதுகுறித்து ஆவின் முகவர் கூறுகையில், “நான் தினமும் 40 டப்பாக்களில் சுமார் 480 லிட்டர் பால் வாங்கி வந்தேன். தற்போது 240 லிட்டர் மட்டுமே வழங்கப் படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான அளவு பாலை வழங்க முடியவில்லை. வழக்கமாக என்னிடம் பால் வாங்கும் பொதுமக்களிடம் பால் இல்லை என்று கூறும்போது, ‘தொடர்ந்து உங்களிடம்தானே பால் வாங்குகிறோம்; இப்போது பால் இல்லை என்று கூறுகிறீர்களே?’ என வாக்குவாதம் செய்கின்றனர்.
ஆவின் நிர்வாகத்திடம் இதுகுறித்து தொடர்ந்து தெரிவிக்கப்பட்டும்,
தட்டுப்பாட்டை சரிசெய்ய இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஒரு மொத்த முகவர் மூலம் ஓரளவு பால் வாங்கி வந்து விநியோகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்” என்றார்.
தனியார் பாலை விட ஆவின் பாலையே விரும்பும் மக்கள்
பொதுமக்கள் கூறுகையில், தனியார் நிறுவனங்களின் பால் லிட்டர் சுமார் ரூ.80 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், ஆவின் பால் ரூ.46 முதல் ரூ.50 வரையிலான விலையில் கிடைக்கிறது. விலை குறைவாக இருப்பதுடன், நீண்ட காலமாக ஆவின் பாலை பயன்படுத்தி வரும் பொதுமக்கள், குழந்தை களுக்கும் ஆவின் பாலை வழங்குவதையே விரும்புகின்றனர்.
ஆனால் ஆவின் பால் போதுமான அளவு கிடைக்காததால், கட்டாயமாக தனியார் பாலை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடியில் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கும் மேலாக ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இதனை நிரந்தரமாக சரிசெய்ய மாவட்ட நிர்வாகமும், ஆவின் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக தூத்துக்குடிக்கென அமைக்கப்பட்டுள்ள பால் உற்பத்தி நிலையத்தை விரைவில் முழுமையான உற்பத்திக்கு கொண்டு வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“ஆவின் பால் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து,
அனைத்து பகுதிகளிலும் தங்கு தடையின்றி பால் கிடைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதே தூத்துக்குடி பொதுமக்களின் தற்போதைய முக்கிய கோரிக்கையாக உள்ளது.