தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான போதைக்கு எதிரான விழிப்புணர்வு கைப்பந்து போட்டி வடபாகம் காவல் நிலைய மின்னொளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.



இப்போட்டியில் தூத்துக்குடியில் உள்ள 4 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். காவல்துறை உதவி ஆய்வாளர் சிவக்குமார் வரவேற்றார். காவல் ஆய்வாளர் வேல்ராஜ் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். லீக் முறையில் நடைபெற்ற போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில் செயின்ட் சேவியர்ஸ் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடத்தையும், லசால் மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாம் இடத்தையும், கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி அணி மூன்றாம் இடத்தையும், செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி அணி நான்காம் இடத்தையும் பிடித்தன.



இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு காவல் ஆய்வாளர் வேல்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி. சுனில், வெற்றி பெற்ற அணிகளுக்கு வடபாகம் காவல் நிலையம் சார்பில் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் பாலமுருகன், பாஸ்கரன், சுணைமுருகன், உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், நிவேதா, தூத்துக்குடி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜவகர், செயலாளர் ராஜா, வழக்கறிஞர் சின்னத்தம்பி, அகில இந்திய கைப்பந்து கழக வீரர் ஜெயபால், ஆசிரியர் பெனிட்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



பள்ளி மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை வளர்ப்பதுடன், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்போட்டி, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.