தூத்துக்குடியை மையமாகக் கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக சமூகநலப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வரும் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை, இந்த ஆண்டும் கல்வி உதவித் திட்டத்தின் மூலம் 350 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பள்ளிச்சீருடைகளை வழங்கி, கல்விக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இரத்ததானம், மரக்கன்றுகள் நடுதல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்த்தல், முதியோர், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு இல்லங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல், பேரிடர் காலங்களில் அரசுடன் இணைந்து தன்னார்வப் பணிகளில் ஈடுபடுதல், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும், பெற்றோரை இழந்த மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களைத் தேர்வு செய்து "சரித்திரம் படை" என்ற திட்டத்தின் கீழ் இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பள்ளிச்சீருடைகளை வழங்கி வருகிறது. கடந்த 2024-ஆம் ஆண்டு 19 பள்ளிகளைச் சேர்ந்த 210 மாணவர்களுக்கும், 2025-ஆம் ஆண்டு 25 பள்ளிகளைச் சேர்ந்த 246 மாணவர்களுக்கும் இந்த உதவி வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையும் டிஎம்பி அறக்கட்டளையும் (TMB Foundation) இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 20 பள்ளிகளைச் சேர்ந்த பெற்றோரை இழந்த மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 350 மாணவர்களைத் தேர்வு செய்து "சரித்திரம் படை 26" என்ற பெயரில் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பள்ளிச்சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தின.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனரும் இயக்குநருமான பி. ஜாய்சன் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் பொருளாளர் மு. விக்னேஷ் வரவேற்புரையாற்றினார். சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை விபாஸ்ரீ முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், டிஎம்பி அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி முனைவர் எம். முத்தையா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ப. அனுசியா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், மாணவர்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளை இலக்காகக் கொண்டு திட்டமிட்டு கல்வி கற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். டிஎம்பி அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி முனைவர் எம். முத்தையா பேசுகையில், "கல்வி கற்கும் ஆர்வமும் முயற்சியும் உங்களிடம் இருந்தால், உங்களை உயர்த்திக் கொண்டு செல்ல தேவையான உதவிகளை வழங்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்" என்றார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ப. அனுசியா, கல்வியுடன் இணைந்து மாணவர்கள் தங்களது தனித்திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் திறமையும் ஒருநாள் வெற்றிக்கான கதவைத் திறக்கும் என்று அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், முந்தைய ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்த மாணவர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இறுதியாக அறக்கட்டளையின் டிரஸ்டி அசோக்குமார் நன்றியுரையாற்றினார். நாட்டுப்பண் பாடலுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் நிர்வாகிகள் ஹரிபிரசாத், சந்தோஷ், பிரான்சிஸ், விஷ்ணு, தமிழ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நோட்டுப் புத்தகங்களும் பள்ளிச்சீருடைகளும் கிடைக்காமல் கல்வியைத் தொடர சிரமப்படும் ஏழை மாணவர்களுக்கு இந்த உதவி பெரும் துணையாக அமைந்தது. "கல்வி கற்பதற்கு வறுமை ஒரு தடையல்ல; படிக்க வேண்டும் என்ற உறுதி இருந்தால் உதவிக்கரம் நீட்ட பலர் இருக்கிறார்கள்" என்ற நம்பிக்கையை இந்த நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.