தூத்துக்குடி மாவட்டத்தில் பாரம்பரிய உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



தூத்துக்குடியில் கோவளம்–பசுவந்தரை–தன்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, முள்ளக்காடு பகுதியில் சுமார் 500 ஏக்கரில் 300-க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் கடந்த 93 ஆண்டுகளாக உப்பு உற்பத்தி செய்து வருவதாகவும், இந்தத் தொழிலை நம்பி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.



மேலும், சுமார் 3,000 ஏக்கர் நிலத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக சிப்காட் மூலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிராக உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறினார்.



இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில், உப்பள நிலங்களின் குத்தகையை நீட்டித்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிடப்பட்டிருந்தாலும், இதுவரை அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.



புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக அரசு, சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும், கப்பல் கட்டும் தளத்தை உப்பளப் பகுதிகளில் அமைக்காமல், மாவட்டத்தில் உள்ள காலியாக உள்ள புறம்போக்கு நிலங்களில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் மற்றும் அமைச்சர்களிடம் மனுக்களும் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.



இந்நிலையில், வருவாய்த் துறை மற்றும் சிப்காட் அதிகாரிகள் உப்பளப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள வருவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, காவல்துறை பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், சங்க தலைவர் மந்திரமூர்த்தி, பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் சின்னராஜ், முகேஷ், சண்முகவேல், எல்.ஆர். சிவாகர், பாலசுப்பிரமணியன், ஈ. பால், அழகேசன், சண்முகசுந்தர ராஜா, சண்முகநாதன், ஸ்ரீராம் உள்ளிட்ட ஏராளமான உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் திரண்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து திரும்பிச் சென்றதாகவும் கூறினார்.



மேலும், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை பலமுறை சந்தித்து கப்பல் கட்டும் தளத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிக்கை விடுத்தும் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்றும், சிவகாசியில் சந்திக்கச் சென்றபோதும் பல மணி நேரம் காத்திருந்த நிலையில் சந்திக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் சேகர் குற்றம்சாட்டினார்.



இறுதியாக, சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர்களின் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட்டு, உப்பளத் தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அவர் எச்சரித்தார். பேட்டியைத் தொடர்ந்து, உப்பளத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.