தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில், ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு மஹா யாகம், அபிஷேகம், பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.



"சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்வில், உலகில் அன்பும் அமைதியும் நிலவவும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் செழித்து வளரவும், பக்தர்களின் வாழ்வில் செல்வ வளம் பெருகவும் வேண்டி காலை முதல் மாலை வரை மஹா யாகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.



இதனைத் தொடர்ந்து ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருளாசி பெற்றனர்.



நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. வழிபாடு மற்றும் அன்னதான ஏற்பாடுகளை "சாக்தஸ்ரீ" சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.