தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி (தன்னாட்சி) மகளிர் நலப்பிரிவு மற்றும் வீராங்கனை – SDG-5 இணைந்து, “ஒவ்வொரு குழந்தையும் முக்கியம் – ஒவ்வொரு பெண்ணும் மதிப்புமிக்கவர்” என்ற தலைப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று (16.07.2026) கல்லூரி அரங்கில் சிறப்பாக நடத்தின.
இந்நிகழ்ச்சியில் சிங்கப்பெண் சிறப்புப் படையைச் சேர்ந்த காவல் துணை ஆய்வாளர் அ. அரோக்கிய ஜென்சி, மகளிர் காவலர்கள் சந்தனமாரி மற்றும் அ. செல்வக்குமாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவிகளிடம் உரையாற்றினர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் சட்ட உரிமைகள், பாதுகாப்பு, பாலியல் தொல்லைகளைத் தடுக்கும் வழிமுறைகள், இணையவழி பாதுகாப்பு, அவசரகால உதவி எண்கள் மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியம் குறித்து அவர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுடன் செயல்படுவதன் மூலம் குற்றங்களைத் தடுக்கவும், பெண்கள் அச்சமின்றி வாழும் சமூகத்தை உருவாக்கவும் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நிகழ்ச்சியை சமூக ஆர்வலரும், புனித மரியன்னை கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியருமான பேராசிரியர் பாத்திமா பாபு வழிநடத்தினார். இந்நிகழ்ச்சி கல்லூரி செயலாளர் அருட்சகோதரி முனைவர் எஸ். குழந்தை தெரசே, முதல்வர் அருட்சகோதரி முனைவர் சி. ஷிபானா, துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் எம். எஸ். எழிலரசி மற்றும் இயக்குநர் அருட்சகோதரி முனைவர் அ. அரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ் ஆகியோரின் ஆதரவுடன் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் டி. சண்முகஜோதி, கணிதத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சி. ரீனா, விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஆர். நிரஞ்சனி மற்றும் கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் செல்வி எஸ். ஆண்ட்ரூஸ் பெலிசிட்டா ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு தகவல்களை ஆர்வமுடன் அறிந்துகொண்டனர்.