தூத்துக்குடி நகரின் பிரதான சாலைகளில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உடனடியாக அந்த கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 63 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி சில கடைகள் மூடப்பட்டிருந்தாலும், தூத்துக்குடி எட்டயபுரம் சாலை மற்றும் குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில், கலைஞர் அரங்கம் அருகே ஏற்கனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைக்கு அடுத்தபடியாக மேலும் இரண்டு புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.



ஒருபுறம் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்துவிட்டு, மறுபுறம் ஒரே பகுதியில் கூடுதலாக புதிய கடைகள் திறப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும், மது போதையால் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் புதிய கடைகள் திறப்பது சமூக விரோத செயல்களுக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



மேலும், அந்த பகுதி பெண்கள், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தும் பிரதான சாலையாக இருப்பதால், புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதன் மூலம் மது அருந்துவோரின் நடமாட்டம் அதிகரித்து, அப்பகுதி மக்கள் மற்றும் சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் சித்ராங்கதன் கூறியுள்ளார்.



அத்துடன், முந்தைய திமுக ஆட்சியில் மது போதையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றதாகவும், தற்போது ஆட்சியில் உள்ள தவெக அரசும் அதே பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். எனவே, எட்டயபுரம் சாலை – குறிஞ்சி நகர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.