பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக தருவைக்குளத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் உற்சாகமாக நடைபெற்றன. பங்குத்தந்தை எஸ்.கே. மணி அந்தோணி தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன், தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் விழா தொடங்கியது.



இதனைத் தொடர்ந்து, தருவைக்குளம் தொடக்கப்பள்ளி மற்றும் சிறார் பள்ளிகளில் நடைபெற்ற விளையாட்டு மற்றும் கல்வித் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கல்விப் பணியைப் பாராட்டும் வகையில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.



விழாவின் முக்கிய நிகழ்வாக, தருவைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.



விழாவிற்கு ஆதரவளித்து அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கிய ஜெயமேரி அவர்களுக்கும், தங்க நாணயங்களை வழங்கிய பவின், சேவியர், பிரதீப் ஆகியோருக்கும், வெள்ளி நாணயங்களை வழங்கிய நவீன், அந்தோணி செல்வசேகர், அலாய், திவாகர், சந்திரபோஸ், தேவதிரவியம், பன்னீர்செல்வம், சுரேஷ், நீக்குலாஸ் உள்ளிட்ட அனைவருக்கும், நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் தருவைக்குளம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.



பெருந்தலைவர் காமராஜரின் கல்விச் சேவையை நினைவுகூரும் வகையில் மாணவர்களை ஊக்குவிக்கும் இந்த நிகழ்ச்சி, பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.