தூத்துக்குடி மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு, தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, வேஷ்டி–சேலைகள் மற்றும் ரூ.3,000 ரொக்கத் தொகை வழங்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை ஆலந்தூரில் தொடங்கி வைத்த இந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு ஹவுசிங் போர்டு பகுதி வாட்டர் டேங்க் அருகே உள்ள ரேசன் கடையில் பொங்கல் பரிசு விநியோகம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி திமுக கவுன்சிலரும், மாநகராட்சி கணக்குக் குழு தலைவருமான ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தெற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் டி.டி.சி. ராஜேந்திரன் முன்னிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் 3வது வார்டு பகுதி சபா உறுப்பினர் செல்வராஜ், திமுக துணை செயலாளர் ராஜாமணி, ரேசன் கடை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.