சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 227-வது நினைவு நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 16-ம் தேதி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய ஆதிக்கத்தைத் துணிச்சலுடன் எதிர்த்துப் போராடியவரும், வீரமும் விவேகமும் நிறைந்தவருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் 227-வது நினைவு நாள் அக்டோபர் 16-ம் தேதி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், அதிமுக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி, அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் உள்ளவருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், அதிமுக வர்த்தக அணிச் செயலாளரும், தூத்துக்குடி மாநகரக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப் பாண்டியன், அதிமுக அமைப்புச் செயலாளரும், கழக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளருமான என். சின்னத்துரை, விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பி. ஜெயபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்துகின்றனர்.
எஸ்.பி. சண்முகநாதன் ஏற்பாடு
இந்த நினைவு நாள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் உள்ளவருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் மேற்கொள்கிறார்.
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அதிமுக தலைமைக் கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.