தூத்துக்குடி உப்பளப் பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் உப்பு உற்பத்தியாளர்கள், தங்களது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கக் கோரி அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத்தின் புதிய தலைவர் ஜேசியா வில்லவராயரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



தூத்துக்குடி மாவட்டத்தில் முள்ளக்காடு, கோவளம், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என கோவளம், பசுவந்தரை, தன்பாடு பகுதிகளைச் சேர்ந்த சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.



இதுதொடர்பாக, உப்பளங்களைப் பாதுகாக்கவும், உப்பு உற்பத்தி யாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தங்களது கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.



இந்நிலையில், தூத்துக்குடி அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்றதைத் தொடர்ந்து, அதன் தலைவர் ஜேசியா வில்லவராயரை உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். அப்போது, உப்பளப் பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உப்பளங் களைப் பாதுகாக்க முன்னெடு க்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.



அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத்தின் புதிய தலைவராக ஜேசியா வில்லவராயரும், பொதுச் செயலாளராக பிரேம்பால் நாயகமும், பொருளாளராக பொன்குமரனும் பதவியேற்றுள்ள நிலையில், புதிய நிர்வாகத்திடம் உப்பு உற்பத்தியாளர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.



இந்தச் சந்திப்பின்போது, உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சேகர் தலைமையில் பொன்ராஜ், ரகுபதி, முகேஷ், சண்முகவேல், பாலசுப்ரமணியன், எல்.ஆர். சிவாகர், ராமர், பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.