பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்க்கை மற்றும் மக்கள் சேவையைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு சேவைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப்பட்ட இந்தச் சேவைப் பணிகள், ஒரு மாத காலத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில், தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி முன்பு மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கும் வகையில் வண்ணமயமான ரங்கோலி கோலங்கள் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வண்ணங்களால் அலங்கரிக்கப் பட்ட கோலங்கள், அந்த வழியாகச் சென்ற பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன. கோலங்களில் இடம்பெற்றிருந்த மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களையும் அவற்றின் நோக்கங்களையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து வதுடன், அத்திட்டங்கள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து எடுத்துரைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அரசின் திட்டங்களை வழக்கமான விளக்க முறைகளிலிருந்து மாறுபட்டு, கலை வடிவத்தின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்த ரங்கோலி நிகழ்ச்சி அமைந்தது.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஏ.எம். ராஜேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், மாவட்டத் துணைத் தலைவர் சிவராமன் காளிராஜா, கிழக்கு மண்டலத் தலைவர் சண்முகசுந்தரம், வணிகப் பிரிவு மாவட்டத் தலைவர் செந்தில், மாவட்டச் செயலாளர் செல்வி, இளைஞரணி சக்திவேல், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், ஓபிசி பிரிவு மாவட்டப் பொதுச்செயலாளர் வன்னியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் டாக்டர் சுதா, மகளிரணி மாவட்டத் தலைவர் வெள்ளத்தாய், ஆன்மிகப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் உஷா, கிழக்கு மண்டலச் செயலாளர் ஜெயரூபி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்று வரும் சேவைப் பணிகளின் ஒரு பகுதியாக, தூத்துக்குடியில் மத்திய அரசின் 20-க்கும் மேற்பட்ட மக்கள் நலத் திட்டங்களை ரங்கோலி கோலங்கள் மூலம் விளக்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.