தூத்துக்குடியில் தனியார் கட்டிடத்தின் பின்புறக் கதவைப் பூட்டுவது தொடர்பாக, வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பெருமாள்சாமி மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகியும் வழக்கறிஞருமான செல்வின் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இந்தச் சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் அளித்த புகார்களின் அடிப்படையில், சிப்காட் காவல் நிலையத்தில் தனித்தனியாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தின் பின்புறக் கதவைப் பூட்டுவது தொடர்பாகப் பெருமாள்சாமிக்கும் வழக்கறிஞர் செல்வினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக, தவெக நிர்வாகியான வழக்கறிஞர் செல்வின் அளித்த புகாரின் பேரில், பெருமாள்சாமி மற்றும் அவரது மனைவி அர்ச்சனா ஆகியோர் மீது குற்ற எண் 705/2026-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, அர்ச்சனா அளித்த புகாரின் பேரில், தவெக நிர்வாகியான வழக்கறிஞர் செல்வின் மீது குற்ற எண் 706/2026-ன் கீழ் எதிர் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் புகார் அளித்துள்ள நிலையில், இரு புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும் சிப்காட் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கிரஸ் மற்றும் தவெக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட இந்த மோதல் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.