பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கோட்டை வளாகம், இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வெளிச்சமின்றி இருளில் மூழ்கிக் காணப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரத்துடன் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தையும் தியாகத்தையும் பறைசாற்றும் இந்த நினைவுக் கோட்டை, தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய வரலாற்றுச் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோட்டை வளாகத்தின் நுழைவுப் பகுதி, நடைபாதைகள் உள்ளிட்ட இடங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த மின்விளக்குகளைச் சீரமைப்பதுடன், தேவையான இடங்களில் புதிய மின்விளக்குகள் அமைத்து, நினைவுக் கோட்டை வளாகத்தைப் பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீரத்தின் அடையாளமான கட்டபொம்மன் நினைவுக் கோட்டை, இருளில் மூழ்கிக் கிடப்பதைத் தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?