தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட முத்தையாபுரம், அத்திமரப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் கடந்த 18 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளும், வளர்ச்சித் திட்டங்களும் போதிய அளவில் செயல்படுத்தப்படவில்லை என்றும், வரிகள் மட்டும் 300 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள தாகவும் குற்றம்சாட்டியுள்ள கிங் மேக்கர் காமராஜர் மக்கள் சங்கம் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், மாநகராட்சியுடன் இணைக்கப் பட்டபோது அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் அல்லது மீண்டும் ஊராட்சிகளாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கிங் மேக்கர் காமராஜர் மக்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கராத்தே கோகுல் நாடார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதி!
தூத்துக்குடி தொழிற்சாலைகள் நிறைந்த முக்கியத் தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு அனல் மின் நிலையங்கள், ரசாயனத் தொழிற்சாலைகள், இந்திய அளவில் புகழ்பெற்ற ஸ்பிக் உரத் தொழிற்சாலை, டாக் மற்றும் கணநீர் ஆலைகள், உப்பளங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உள்ள முத்தையாபுரம், அத்திமரப்பட்டி ஆகியவை முன்பு ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தன. அப்போது பொது மக்களின் அடிப்படைத் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு, சிறப்பான நிர்வாகம் நடைபெற்றது.
ஆனால், சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிகள் தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. அப்போது நடைபெற்ற தொடக்க விழாவில், ஏற்கெனவே மாநகராட்சியின் கீழ் உள்ள பகுதிகளைப் போல இணைக்கப்பட்ட பகுதிகளிலும் 100 சதவீதம் வளர்ச்சி ஏற்படுத்திய பின்னரே வரிகள் உயர்த்தப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால், தாங்கள் ஏமாற்றப் பட்டதாகவே இப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.
வடிகால்கள் அகற்றப்பட்டன; மழைநீர் தேங்குகிறது!
ஊராட்சி நிர்வாகத்தின்போது திருச்செந்தூர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த வடிகால்கள் அகற்றப்பட்ட நிலையில், அவற்றுக்குப் பதிலாக முறையாகப் புதிய வடிகால்கள் அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் சேதமடைவதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த பேருந்து நிறுத்த நிழற்குடைகளும் அகற்றப்பட்டு, மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ஏற்கெனவே மாநகராட்சிப் பகுதிகளாக இருந்த இடங்களில் பேருந்து நிழற்குடைகளில் குளிர்சாதன வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகக் குறிப்பிடப் படுகிறது. ஆனால், மாநகராட்சியுடன் இணைக்கப் பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள்கூட முறையாகச் செய்யப்படாத நிலை நீடிக்கிறது.
முத்தையாபுரத்தில் அகற்றப்பட்ட போலீஸ் நிழற்குடை!
முத்தையாபுரம் துறைமுகச் சாலை சந்திப்பில் விபத்துகளையும் போக்குவரத்து நெரிசலையும் தவிர்க்கும் வகையில் முன்பு போலீஸ் நிழற்குடை அமைக்கப் பட்டிருந்தது. அங்கு போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், அந்த நிழற்குடை அகற்றப்பட்டதுடன், மீண்டும் அமைக்கப்படாமல் கடந்த 18 ஆண்டுகளாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் கடந்து செல்லும் இந்தச் சாலையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து நிகழ்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சீரமைக்கப்பட்ட ஊரணி பயன்பாட்டுக்கு வரவில்லை!
முள்ளக்காடு பேருந்து நிறுத்தம் அருகே இருந்த ஊரணி சீரமைக்கப்பட்டும், பொது மக்களின் பயன்பாட்டு க்காகத் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பராமரிப்பின்றி ஊரணி தூர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் இருந்தபோது பொது மக்களுக்குத் தேவையான பணிகளைச் சிறப்பாக மேற்கொண்ட நிலையில், தற்போது நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இருந்தும் இப்பகுதிகளின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாகக் குற்றம்சாட்டப் படுகிறது.
வளர்ச்சித் திட்டங்கள் இல்லை; வரிகள் மட்டும் 300 சதவீதம் உயர்வா?
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டபோது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், ஏற்கெனவே மாநகராட்சிப் பகுதிகளாக இருந்த இடங்களில் நடைபாதைகள் அமைத்தல், சாலைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால், இணைக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதிகளில் சொத்து வரி உள்ளிட்ட வரிகள் 300 சதவீதம் வரை உயர்த்தப் பட்டுள்ளதாகவும், வரி வசூல் ஆண்டுக்கு இருமுறை மேற்கொள்ளும் முறையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அடிப்படை வசதிகள்கூட முழுமையாகக் கிடைக்காத நிலையில், வரிகளை மட்டும் இவ்வளவு அதிகமாக உயர்த்தி வசூலிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்திய அளவில் பெயர்பெற்ற தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அடிப்படை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பது மாநகராட்சிக்கு அழகல்ல. மக்களிடம் வரிகளை வசூலிப்பதில் காட்டும் வேகத்தை, அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதிலும் காட்ட வேண்டும்.
மீண்டும் ஊராட்சிகளாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்!
எனவே, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட முத்தையாபுரம், அத்திமரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி 100 சதவீதம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு, சாலை, மழைநீர் வடிகால், பேருந்து நிழற்குடை, போக்குவரத்துப் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக ஏற்படுத்த வேண்டும்.
அதுவரை வரிகளை உயர்த்தி வசூலிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளாமல் வரிகளை மட்டும் உயர்த்தி மக்களைச் சிரமப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்குறுதியின்படி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாவிட்டால், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிகளை மீண்டும் ஊராட்சிகளாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என கிங் மேக்கர் காமராஜர் மக்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர் கராத்தே கோகுல் நாடார் தனது அறிக்கையில் வலியுறுத்தி யுள்ளார். இக்கோரிக்கையை அப்பகுதி பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.