தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டுதோறும் ஆண்டு விழா நடத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை முன்வர வேண்டும் என்றும், இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் சகா கலைக்குழு நிறுவனர் முனைவர் சகா. சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆண்டு விழா நடத்துவதற்கு பள்ளிக்கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆண்டு விழாக்கள் நடத்தப்படும் போது, பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மேடையில் ஏறி தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
தற்போது நடத்தப்படும் கலைத் திருவிழாக்களில் குறிப்பிட்ட மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் சூழல் உள்ளது. இதனால் மற்ற மாணவர்கள் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்து வதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போகின்றன. ஆனால், பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடத்தப்பட்டால், அனைத்து மாணவர்களுக்கும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.
மாணவர்களிடம் கல்வித் திறமை மட்டுமின்றி, பேச்சு, நடனம், பாடல், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைத்திறமைகளும் இருக்கும். இத்தகைய திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு ஆண்டு விழாக்கள் சிறந்த தளமாக அமையும். மேடையில் ஏறி தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு தன்னம் பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். இதன் மூலம் ஆசிரியர்களிடமும் சக மாணவர்களிடமும் அவர்கள் மதிப்புமிக்கவர்களாக உருவாக முடியும்.
மேலும், பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடத்தப்படும்போது பெற்றோர்கள் பள்ளிக்கு வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். தங்களுடைய பிள்ளைகள் மேடையில் நிகழ்ச்சிகளை நிகழ்த்து வதையும், அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்து வதையும் நேரில் காணும் பெற்றோர்கள் மகிழ்ச்சி யடைவார்கள். இதன் மூலம் பெற்றோர்களுக்கும் பள்ளிகளுக்கும் இடையிலான தொடர்பு வலுப்பெறும்.
80-களிலும், 90-களிலும் படித்த மாணவர்களின் ஏக்கம்!
1980-கள் மற்றும் 1990-களில் பள்ளிகளில் படித்த மாணவர்களிடம் கேட்டுப் பார்த்தால், அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாக்களில் பங்கேற்று எடுத்துக்கொண்ட புகைப்படங் களைக்கூட வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாமல் தவித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
இன்றைய காலகட்டத்தில் நம்முடைய தொலைபேசிகளில் ஏராளமான புகைப்படங்கள் இருக்கின்றன. ஆனால், அவை எந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்டவை என்பதை நினைவுகூர முடியாத சூழலும் உள்ளது. பள்ளிப் பருவத்தில் நடைபெற்ற ஆண்டு விழாக்களில் பங்கேற்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், மாணவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளாகத் திகழும்.
அந்த வகையில், பள்ளி ஆண்டு விழாக்கள் என்பது வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், மாணவர் களின் திறமைகளை வெளிப்படுத்தவும், அவர் களுடைய பள்ளிப் பருவ நினைவுகளைப் பாதுகாக்கவும் உதவும் முக்கிய நிகழ்வாக அமையும்.
ஆசிரியர்கள் வழிகாட்டிகளாகச் செயல்பட வாய்ப்பு வேண்டும்!
ஆசிரியர்கள் மாணவர்களின் வழிகாட்டிகளாக இருந்து, அவர்களிடம் உள்ள தனித்திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களின் திறமைகள் வெளிப்படுவதற்கும், அவர்கள் தன்னம்பிக்கையுடன் வளர்வதற்கும் ஆசிரியர்கள் சுதந்திரமாகப் பணியாற்று வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.
எனவே, தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு தோறும் ஆண்டு விழா நடத்துவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து, ஒவ்வொரு மாணவரும் மேடையேறித் தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
“கலையும் கல்வியும் சகா” என்ற நோக்கத்துடன், மாணவர்களின் கலைத்திறன்களையும் கல்வியையும் ஒருங்கிணைத்து வளர்க்கும் வகையில் அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்று சகா கலைக்குழு நிறுவனர் முனைவர் சகா. சங்கர் தெரிவித்துள்ளார்.