தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சாதிய உணர்வுகளைத் தூண்டி, சாதிய மோதல்களை உருவாக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவிப்போர் மீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம் கட்சியின் பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான அருணாதேவி ரமேஷ் பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட அந்த மனுவில், தென் மாவட்டங்களில் சமூக அமைதிக்கும், மக்களிடையே நிலவும் நல்லிணக்கத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சாதிய உணர்வுகளைத் தூண்டும் கருத்துகள் தெரிவிக்கப் படுவதாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.



இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கூறியதாவது:



முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ரோச் விக்டோரியா பதவி வகித்தார். அதேபோல், தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.



இந்நிலையில், சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களை உருவாக்கும் வகையில் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் கருத்துகளைத் தெரிவித்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.



அமைதிப் பூங்காவாகத் திகழும் தென் மாவட்டங்களில் சாதிய உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசுவதும், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் கருத்துகளைப் பரப்புவதும் சமூக அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் என்றார்.



எனவே, இத்தகைய கருத்துகளைத் தெரிவிப்போர் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். சாதிய மோதல்களைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, தென் மாவட்டங்களில் சமூக ஒற்றுமையையும் அமைதியையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கேட்டுக்கொண்டார்.