தூத்துக்குடி மாநகரில் மக்கள் நலன் மற்றும் மாணவர் வசதியை மேம்படுத்தும் நோக்கில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பேருந்து நிழற்குடையும், பொதுமக்களுக்கு புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டுகளும் வழங்கப்பட்டன.


தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திருச்செந்தூர்–தூத்துக்குடி பிரதான சாலையில், காமராஜ் கல்லூரி மற்றும் பள்ளி எதிரில் புதிதாக அமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பேருந்து நிழற்குடையை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கல்லூரி மாணவிகளுடன் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி, மாணவர்களுக்கும் பயணிகளுக்கும் அரசு வழங்கும் வசதிகள் குறித்து அமைச்சர் எடுத்துரைத்தார்.


இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களில் குடும்பத்திலிருந்து பிரிந்து தனியாக குடியேறியவர்கள், திருமணத்திற்குப் பின் தனிக்குடும்பமாக வசிப்போர் ஆகியோர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்த புதிய ரேசன் கார்டு கோரிக்கைகள், உணவுப் பொருள் வழங்கல் துறையினரால் முறையாக விசாரணை செய்யப்பட்டு, 470 பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வழங்கப்பட்டன. டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் கீதாஜீவன் அனைவருக்கும் நேரில் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை வழங்கினார்.


இந்த நிகழ்ச்சிகளில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்டாட்சியர் ஞான்ராஜ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர்கள் மேகநாதன், ரவீந்திரன், மாநகர மகளிர் அணி துணை அமைப்பாளர் சந்தனமாரி, கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், வைதேகி, முத்துமாரி, சரவணக்குமார், ஜெயசீலி, ஆறுமுகம், வட்ட துணைச்செயலாளர் சந்திரசேகர், மாவட்ட மற்றும் மாநகர வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், வட்டப்பிரதிநிதிகள், முன்னாள் கவுன்சிலர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


புதிதாக விண்ணப்பித்து ஸ்மார்ட் ரேசன் கார்டு பெற்றுக்கொண்ட அனைவருக்கும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கமும் வழங்கப்படும். இதில் ஸ்மார்ட் ரேசன் கார்டு பெற்றவர்களில் சுமார் 80 சதவீதம் புதுமண தம்பதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.