தூத்துக்குடி குறுக்குசாலையில் அமைந்துள்ள கீதாஜீவன் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் நடைபெற்ற 3-ஆம் பட்டமளிப்பு விழாவிற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் ஜீவன் ஜேக்கப் முன்னிலை வகித்தார். ஆண்டறிக்கையை முனைவர் இளங்குமரன் வாசித்தார்.
விழாவில் 209 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், பள்ளிப் பருவத்தில் கற்ற நல்லொழுக்கமும், கல்லூரிக் கல்வியும் ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய அடித்தளங்கள் எனக் குறிப்பிட்டார். கல்வியுடன் பொதுஅறிவையும் வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையில் நிச்சயம் சாதிக்கலாம் என்றார்.
அனைத்து பாடங்களையும் முழுமையாகக் கற்றுக்கொண்டு, படிக்கும் காலத்திலேயே அடுத்த இலக்கை தீர்மானித்து முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்தக் கல்லூரியில் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர், 19 பேர் சிறப்புத் தேர்ச்சியாளர்களாக வெளிப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்றார். எந்தப் பணியையும் விருப்பத்துடன், கடமை உணர்வோடு செய்தால் வெற்றி உறுதி எனவும், குடும்பத்தினரின் தியாகமும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் இன்றைய உயர்வுக்கு காரணம் எனவும் நினைவூட்டினார். ஒவ்வொரு முயற்சியும் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் எனக் கூறினார்.
அப்துல் கலாம் கூறியபடி கனவுகள் காணுங்கள்; அவை நிறைவேறும் என்றார். திராவிட மாடல் ஆட்சியில், “எல்லோருக்கும் எல்லாம்” என்ற அடிப்படையில் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுவதையும், பட்டம் முடிந்ததும் வேலைவாய்ப்பை உருவாக்கும் திறனாய்வு பயிற்சிகள் வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். கல்வியும் மருத்துவமும் தமது “இரண்டு கண்கள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை வலியுறுத்தியிருப்பதை நினைவூட்டிய அவர், உயர்பதவிகள் மட்டுமன்றி பொதுவாழ்விலும் ஈடுபட்டு சமூகத்திற்குப் பயனளிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
விழாவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர் மகிழ்ஜான் சந்தோஷ், டாக்டர் கீர்த்தனாமகிழ், சுதன் கீலர், சுதாசுதன், பல்கலைக்கழக பிரதிநிதி முனைவர் சௌடியா, வடக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி தலைவர் அருண்குமார், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.