தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வாரமும் மண்டல வாரியாக குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஸ்டேட் பாங்க் காலணியில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர் நிர்மல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


முகாமில் பேசுகையில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி பகுதியில் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் விரைவாக தீர்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, கட்டிட அனுமதி உள்ளிட்ட பணிகளுக்காக இதுவரை 876 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 868 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 8 மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறினார்.


பொதுமக்கள் நேரில் வந்து மனு அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், மாநகராட்சி இணையதளம் மூலம் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரடியாக இல்லத்திற்கே வந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் மேயர் உறுதியளித்தார். இதனால் பொதுமக்களுக்கு எந்தவித அசௌகரியமும் இல்லை என அவர் தெரிவித்தார்.


தமிழர் திருநாள் தை பொங்கலை முன்னிட்டு, மாநகராட்சி மைய அலுவலகத்தில் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற அடிப்படையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற உள்ளதாகவும், இந்தாண்டு அனைத்து மண்டல அலுவலகங்களிலும் பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளதாகவும் அறிவித்தார். மேலும், போகி பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 10, 11 ஆகிய சனி–ஞாயிறு தினங்களில் மாஸ் கிளீனிங் பணிகள் நடைபெறும் என்றும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களை எரிக்காமல் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் சுகாதாரக் கேடுகளையும் தடுக்க “புகையில்லா போகி பண்டிகை”யை அனைவரும் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்திய மேயர், மக்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்றும் கேட்டார். பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக பயன்படுத்தினால் கொசுத் தொல்லை, தொற்றுநோய்கள் போன்றவை குறையும் என்றும், இதற்காக அரசு பெரும் நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.


நகரின் முக்கிய ஓடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் மாற்று முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பக்கிள் ஓடையில் எதிர்காலத்தில் மழைநீர் மட்டுமே ஓட வேண்டும் என்பதே மாநகராட்சியின் இலக்கு எனவும் தெரிவித்தார்.


தருவைகுளம் குப்பை கிடங்கில் 500 மரங்களுடன் தொடங்கப்பட்ட மரநடுகை தற்போது லட்சம் மரங்களைத் தாண்டி குறுங்காடுகளாக உருவெடுத்துள்ளதாகவும், இதுவரை 20 குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். பொதுமக்களும் தங்கள் பங்கிற்கு குறைந்தது ஒரு மரமாவது வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.


மேலும், பொங்கல் விடுமுறைக்கு முன்பாக அனைத்து பூங்காக்களும் புதுப் பொலிவுடன் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், புதிய பூங்காக்கள் அனைத்து மண்டலங்களிலும் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். வடக்கு மண்டலத்தில் தனசேகரன் நகரில் உள்ள பூங்கா மற்றும் பிங் பார்க் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், எழில் நகரில் புதிய பூங்கா பணிகள் விரைவில் நிறைவடையும் என்றும் கூறினார். இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று, லூர்தம்மாள்புரம், ஸ்டேட் பாங்க் காலனி, ஹவுசிங் போர்டு பகுதிகளில் உடற்பயிற்சி கூடங்களுடன் கூடிய சிறிய பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் வேலாயுதம், உதவி செயற்பொறியாளர்கள் முனீர்அகமது, ராஜேஷ்கண்ணா, நகர்நல அலுவலர் சரோஜா, இளநிலை பொறியாளர் அமல்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர், கண்ணன், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், கவுன்சிலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.