ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பில் மூத்த பத்திரிக்கையாளர் டி.எஸ்.எஸ். மணி தலைமையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், நில மீட்பு, சமச்சீர் இழப்பீடு, அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ஆசிரியர்கள் மோசடி வழக்கில் விரைவான நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.



சமச்சீர் இழப்பீடு வழங்க வேண்டும்



1996ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குட்பட்ட தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம், குமரகிரி உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் விரிவாக்கத்திற்காக சுமார் 636 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.



இந்த நிலங்களில் 2008ஆம் ஆண்டு 143 ஹெக்டேர் நிலத்திற்கு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த போதிலும் அப்போதைய அரசு நிர்பந்தப்படுத்தி குறைந்த தொகையில் பத்திரப்பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது.



பின்னர் 2010ஆம் ஆண்டு ஏக்கருக்கு ரூ.6.50 லட்சம், 2015ஆம் ஆண்டு ரூ.15.35 லட்சம், 2018ஆம் ஆண்டு ரூ.18.50 லட்சம் வழங்கப்பட்டதாகவும், ஒரே அரசாணையின் கீழ் ஒரே நேரத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு வெவ்வேறு காலங்களில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதால் இழப்பீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டை சரிசெய்து, அனைவருக்கும் ஏக்கருக்கு ரூ.18.50 லட்சம் என்ற அடிப்படையில் சமச்சீர் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



ஆசிரியர்கள் மோசடி வழக்கில் விரைவான நடவடிக்கை தேவை



ஆறுமுகநேரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆதவா பவுண்டேஷன் மூலம் அரசு பள்ளிகளில் வேலை வழங்குவதாக கூறி சுமார் 3,000 ஆசிரியர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.



இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.24 கோடி வழங்க சமரச ஒப்பந்தம் செய்யப்பட்டும் அது நிறைவேற்றப்படவில்லை என்றும், சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.



எனவே, உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, அரசு பள்ளிகளில் பணியாற்றியவர்களுக்கு கருணை அடிப்படையில் மீண்டும் அரசு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.



மதுரா கோட்ஸ் நிலத்தை அரசு மீட்க வேண்டும்



தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த மதுரா கோட்ஸ் பஞ்சு ஆலைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட சுமார் 20 ஏக்கர் நிலம் தற்போது தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்படுவதாகவும், அந்த நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றுவதற்காக கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.



மாநகராட்சி ஆவணங்களில் அந்த நிலம் "சர்க்கார் புறம்போக்கு" என பதிவாக இருப்பதாகக் கூறி, அரசுக்குச் சொந்தமான நிலத்தை மீட்டு, தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி தமிழக அரசே கையகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு வழங்க வேண்டும்


ஓட்டப்பிடாரம் ஒன்றியம் கீழஅரசடி ஊராட்சிக்குட்பட்ட அய்யனார் புறம் பகுதியில் உள்ள சுமார் 1,000 ஏக்கர் மேய்ச்சல் தரை மற்றும் அனாதீனம் புறம்போக்கு நிலங்கள் அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்னரும் முழுமையாக மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.



அந்த நிலங்களை உடனடியாக மீட்டு, ஏழை, பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டது.



அரசு கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்



விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழவைப்பார் பஞ்சாயத்து ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் அரசு கண்மாய் மற்றும் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்றி, ஓடை மற்றும் வாரிக்கால்களை சீரமைத்து விவசாய பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.



கோவில் நிலம் மற்றும் சிப்காட் நிலங்களை மீட்க கோரிக்கை
விளாத்திகுளம் தாலுகா வைப்பார் பஞ்சாயத்து கல்லூரணி கிராமத்தில் உள்ள நைனார் சத்திரம் சுவாமி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 573 ஏக்கர் நிலம், அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின்னரும் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படவில்லை என்றும், பல ஆண்டுகளாக எந்த குத்தகைத் தொகையும் செலுத்தாமல் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.



அதேபோல், வைப்பார் பகுதியில் சிப்காட் அமைக்க அரசுக்காக கையகப்படுத்தப்பட்ட சுமார் 1,000 ஏக்கர் நிலத்தில் சில தனியார் நிறுவனங்கள் உப்பளங்கள் அமைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறி, அந்த ஆக்கிரமிப்புகளையும் அகற்றி அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.



இந்த அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் நில மீட்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.