தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எப்போதும்வென்றான் கன்னியம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமையான இன்று உற்சாகமாக நடைபெற்றன.



கல்வியுடன் உடற்திறனையும் மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இப்போட்டிகளில், ஓட்டப்பந்தயம், கயிறு இழுத்தல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டதுடன், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவர்களிடையே உடல்நலம், ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் போட்டி மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.



நிகழ்ச்சியில் எப்போதும் வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.



மேலும், பள்ளி தலைமையாசிரியர் சுபாசினி, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு போட்டிகளை உற்சாகப்படுத்தினர். காமராஜரின் கல்விச் சேவையை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது.