ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனையில் செயல்பட்டு வரும் அமுதம் நியாய விலை கடை திறக்கப்படாததால், பொதுமக்கள் கடை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார் அய்யனார் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.



பசுவந்தனையில் செயல்பட்டு வரும் அமுதம் நியாய விலை கடையின் மூலம் 1,200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 31.08.2026 அன்று காலை 10.30 மணி வரை ரேஷன் கடை திறக்கப் படாததால், அத்தியாவசியப் பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் கடை முன்பு நீண்ட நேரம் காத்திருந்தனர்.



அப்போது அவ்வழியாக சென்ற அப்பகுதி சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் பாபுவிடம், கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து கப்பிகுளம் பாபு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரை தொடர்புகொண்டு ரேஷன் கடையை உடனடியாக திறக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.



இதன் தொடர்ச்சியாக சுமார் 30 நிமிடங்களில் கடைக்கு வந்த விற்பனையாளர் கடையை திறந்தார். இருப்பினும், கப்பிகுளம் பாபு தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், உயரதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பொருட்களை வாங்குவோம் என உறுதியாக தெரிவித்தனர்.



இதையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் ஓட்டப்பிடாரம் தாசில்தார் அய்யனார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில், வாரந்தோறும் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்கள் ரேஷன் கடையை திறந்து செயல் படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.



இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு, ரேஷன் பொருட்களை பெற்றுச் சென்றனர். ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படாதது குறித்து தகவல் பலகையில் எந்தவித அறிவிப்பும் தெரிவிக்காமல் விற்பனையாளர் கடையை பூட்டிச் சென்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.