தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பல்வேறு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்போது தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் “உதயநிதி ஃப்ரெஷ் ஜூஸ் கார்னர்” கடைக்கு அவர் வருகை புரிந்தார்.
இந்த கடையின் உரிமையாளர் ஜே.கே. ஜஸ்டின், தனது உழைப்பில் இருந்து சேமித்த பணத்தை பயன்படுத்தி ஏழை எளிய மக்களின் வேண்டுகோளை ஏற்று 7 தையல் இயந்திரங்களை வாங்கி வழங்கும் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அந்த தையல் இயந்திரங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது கையால் இன்று ஏழை மற்றும் எளிய மக்களுக்கு வழங்கினார்.
ஒரு காலத்தில் வறுமையிலும் தன்னம்பிக்கை இழந்த நிலையிலும் இருந்த ஜஸ்டினுக்கு உதயநிதி ஸ்டாலின் உதவி செய்து வாழ்வாதாரமாக இந்த கடையை அமைக்க வழிவகுத்தார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் முயற்சி மற்றும் ஏற்பாட்டில் இந்த கடை உருவாக்கப்பட்டு ஜஸ்டினுக்கு வழங்கப்பட்டது.
அந்த கடையின் வருமானத்திலிருந்து இன்று ஜஸ்டின் சமூகப் பொறுப்புடன் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் உள்ள ஜே.கே. ஜஸ்டின் கடைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூன்றாவது முறையாக வருகை புரிந்து நலத்திட்டங்களை வழங்கியது சிறப்புமிக்கதாகும். இதற்கு முன்பும் ஜஸ்டின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கியதுடன், தையல் இயந்திரங்களையும் மூன்றாவது முறையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.