விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், காவல்துறையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.



தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கூறி, விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.



இந்த நிலையில், மார்க்கண்டேயனை நேரில் சந்திக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., எம்எல்ஏக்கள் அப்துல் வகாப், கருணாநிதி உள்ளிட்டோர் வந்தனர்.



ஆனால், காவல்துறையினர் அலுவலகம் முன்பு தடுப்பு வேலிகள் அமைத்து அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் காவல்துறையினருக்கும் திமுக நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த திமுகவினரை அப்புறப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.



இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், “ஒரு சட்டமன்ற உறுப்பினரை சந்திக்க கூட அனுமதி மறுக்கப்படுகிறது. அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதே தெரியவில்லை. அவரிடம் செல்போன் வைத்திருக்க அனுமதி இல்லை. உதவியாளர், வழக்கறிஞர் மற்றும் எங்களைப் போன்ற முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களையும் சந்திக்க விடவில்லை. அவருக்கு முதுகுவலி உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன.



அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே பார்க்க வந்தோம்,” என்றார். மேலும், “எந்தவித நோட்டீஸும் வழங்காமல் ஒரு சட்டமன்ற உறுப்பினரை கைது செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. மேலிட உத்தரவு என்ற பெயரில் போலீசார் செயல்படுகின்றனர். இது ஜனநாயக விரோத நடவடிக்கை. சட்டத்தை கையில் எடுத்துள்ளனர்,” என குற்றம்சாட்டினார்.



அத்துடன், “எதிர்க்கட்சியை ஒடுக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒடுக்க ஒடுக்க நாங்கள் நீர்க்குமிழி போல மேலே வருவோம். எங்களது தலைவர் மு.க. ஸ்டாலின், மார்க்கண்டேயனை பார்த்துவிட்டு வருமாறு கூறியிருந்தார். ஆனால் அதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.



மேலும், சில புகார்களில் நடவடிக்கை எடுக்காத அரசும், எதிர்க்கட்சி நிர்வாகிகள் மீது மட்டும் வேகமாக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் விமர்சித்தார். “ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அடக்குமுறையை மக்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்,” என்றும் கீதாஜீவன் கூறினார்.



மார்க்கண்டேயன் கைது எதிரொலி – தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு



மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடி–திருநெல்வேலி பிரதான சாலையில் 3-ஆம் மைல் பாலம் அருகே காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.



திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானதாக கூறப்பட்டது. பலரை வாகனங்களை வெளியே நிறுத்திவிட்டு நடந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியதுடன், சிலரிடம் கடுமையான முறையில் பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.



மேலும், செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், தேவையற்ற இடையூறுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.