பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, அனைவருக்கும் கல்வி உரிமை, சமத்துவம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தியும், நீட் தேர்வை எதிர்த்தும், பயிற்சி நிலைய முறைகேடுகளை கண்டித்தும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.



தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்தப் போட்டியில், 14 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பனிமயமாதா பேராலயம் முன்பிருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் செல்லக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



போட்டியாளர்கள் கேம்ப்-1 ரயில்வே கேட் வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் ஓடி மீண்டும் பனிமயமாதா பேராலயம் முன்பு வந்து போட்டியை நிறைவு செய்தனர். ஆண்கள் பிரிவில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ.10 ஆயிரம், ஐந்தாம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. பெண்கள் பிரிவில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த ஆர்த்தி முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் பெற்றார். இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமியர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.



அதோடு, அடுத்த நிலையில் வந்த 116 பேருக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டு, மொத்தம் 124 பேருக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. டேனியல்ராஜ், வழக்கறிஞர் சுப்பிரமணிய ஆதித்தன், சுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் ஐசன் சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், செந்தூர்பாண்டி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபால், மைக்கேல், பிரபாகர், ஜெபராஜ், மாவட்டச் செயலாளர்கள் இக்னேசியஸ், கதிர்வேல், மாவட்ட துணைத் தலைவர்கள் நாகேந்திரன், ராஜாராம், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் மைதீன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஸ்டாலின், தென்மண்டல மாநில பேச்சாளர் பார்த்திபன், எஸ்.சி. துறை ஏ.டி. பிரபாகரன், மீனவர் காங்கிரஸ் சிமியோன், அமைப்பு சாரா காங்கிரஸ் சேவியரம்மாள், ஊடகப் பிரிவு ஜெயஜோதி, வார்டு தலைவர்கள் காமராஜ், முனியசாமி, ராஜரத்தினம், சுப்பிரமணியன், கிருஷ்ணன், ஜெயக்குமார், செய்யது அலி, ரதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இந்த மினி மாரத்தான் போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொத்தம் 1,887 பேர் பங்கேற்று உற்சாகமாக ஓடியது குறிப்பிடத்தக்கது.