அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் செல்லக்குமார், தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் கல்வி தொடர்பான கருத்துகளை தெரிவித்தார்.



அப்போது அவர் கூறியதாவது: "தமிழகத்தில் மீண்டும் பெருந்தலைவர் காமராஜரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். அதற்காக 'லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்' என்ற கோஷத்தை மக்களிடம் கொண்டு சென்று வருகிறோம்.



மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்க்கிறது. நீட் பயிற்சி மையங்கள் வினாத்தாள்களை விற்பனை செய்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகின்றன. இதன் காரணமாக திறமையான ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்படுவதோடு, ஆண்டுதோறும் பல 'அனிதாக்களை' நாம் இழந்து வருகிறோம்.



மாணவர்களின் எதிர்காலம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரகாண்ட் மாநிலத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்துள்ளார். அந்த கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் ஏற்பாட்டில் மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டுள்ளது" என்றார்.



இதனைத் தொடர்ந்து, டாக்டர் செல்லக்குமார் முன்னிலையில் சுரேஷ் பெர்னான்டோ மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.