தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.



மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான சுபா தேவி தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் 153 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றில் 20 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.75,25,485 மதிப்பிலான தீர்வுத்தொகை வழங்கப்பட்டது.



தூத்துக்குடி, கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய நீதிமன்றங்களில் தலா ஒரு அமர்வு நடைபெற்றது. மேல்முறையீட்டு வழக்குகள், மாற்றுமுறை ஆவணச் சட்ட வழக்குகள் மற்றும் சமரசத்தின் மூலம் தீர்க்கக்கூடிய பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.



இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பீரித்தா, 3-வது நீதித்துறை நடுவர் விஜய் ராஜ்குமார், மற்றும் பிற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்காடிகள், காவல்துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், நடுநிலை நீதிபதியுமான சுபாஷினி மேற்கொண்டிருந்தார்.