தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 7 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் வெறும் 5 மணி நேரத்திலேயே அதிரடியாக கைது செய்து தங்கச் செயினை மீட்டனர்.
நேற்று (மார்ச் 6) சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிர்வேல் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அப்போது வீட்டில் இருந்த பெண்மணியிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடியார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது தூத்துக்குடி P&T காலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சசிகுமார் (30) என்பதும், கதிர்வேல் நகர் பகுதியில் வீட்டுக்குள் புகுந்து பெண்மணியிடம் இருந்து 7 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சசிகுமாரை கைது செய்து, அவரிடம் இருந்த தங்கச் செயினையும் மீட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட சசிகுமார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
வீடு புகுந்து செயின் பறித்த எதிரியை துரிதமாக கைது செய்து தங்கச் செயினை மீட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் பாராட்டினார்.