தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மேலூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா (1926 – 2026) சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆய்வுக் கூடத்தை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்.


இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், நூறு ஆண்டுகள் கல்விச் சேவையை செய்து வரும் மேலூர் மாநகராட்சி பள்ளியின் பங்களிப்பை பாராட்டியதுடன், மாணவர்கள் கல்வியுடன் ஒழுக்கம் மற்றும் திறமையிலும் முன்னேற வேண்டும் என்று வாழ்த்தினார்.


இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, NTPL நிறுவனத்தின் CEO அனந்த ராமானுஜம், பள்ளியின் தலைமையாசிரியர் பிரேமா ஆனந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், பள்ளியின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை நினைவுகூரும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.