தூத்துக்குடியில் இன்று (01.05.2025) ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் (பழைய பேருந்து நிலையம்) வாயிலில் தூத்துக்குடி தவெக சார்பில் கழக தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமை தாங்கி நீர் மோர் பந்தலை திறக்க இருந்தார். இன்று காலை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தவெக சார்பில் அமைக்கப்பட்டு இருந்த பந்தலை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நீர் மோர் பந்தலை அகற்றினர்.
தகவல் அறிந்து மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் அண்ணா பேருந்து நிலையம் அருகில் திரண்டனர். அப்போது அவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை இதனால் திடீரென அஜிதா ஆக்னல் தலைமையில் தவெக நிர்வாகிகள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பேருந்து நிலையம் செல்லக்கூடிய பேருந்துகள் செல்லமுடியாமல் நீண்ட தூரம் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உடனே காவல் ஆய்வாளர் தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னலிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகள் கலைந்து சாலை ஓரமாக நின்று தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
பின்னர் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் செய்தியாளர்களிடம் கூறுகையில் போக்குவரத்து காவலர் மற்றும் ஏ.எஸ்.பி. யிடம் முறையான அனுமதி பெற்று தான் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு வந்து பேனர்களை கலட்டாமல் கிழித்து அப்புறப்படுத்தி இருக்கிறார்கள்.
எங்களிடம் முறையான எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இந்த இடத்தில் நீர் மோர் பந்தல் அமைப்பதனால் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் இல்லை, அப்படியென்றால் தூத்துக்குடி மாநகர் முழுவதும் பிரச்சினைகள் தலைவிரித்து ஆடுகிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை போதை நடமாட்டம் சர்வசாதாரணமாக உள்ளது.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லக்கூடிய சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தூத்துக்குடி மாநகராட்சி பெரும்பாலான பகுதிகளில் குடிநீரோடு கழிவுநீர் கலந்து வருகிறது. இதற்கு எந்த நடவடிக்கையும் இந்த மாநகராட்சி நிர்வாகம் எடுக்க தவறியது. ஆனால் நீர் மோர் பந்தலை அகற்றுவதற்கு மட்டும் விரைந்து நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
இதுபற்றிய தகவல்களை ஏ.எஸ்.பி யிடம் தெரிவித்தோம். ஏ.எஸ்.பி. அவர்கள் இந்த நீர் மோர் பந்தல் அமைப்பினால் போக்குவரத்து எந்த இடையூறும் இல்லை என்று கூறி இருக்கிறோமே தவிர காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நீர் மோர் பந்தலை அப்புறப்படுத்தியது தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தான் என்று கூறினார்.
தூத்துக்குடியில் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் மற்றும் திமுகவின் திட்டமிட்ட செயல் தான் இது, தமிழக வெற்றிக் கழகத்தின் மீது ஆளுங்கட்சி கொண்ட காழ்ப்புணர்ச்சியால் மட்டுமே நீர் மோர் பந்தல் இந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு இருக்கிறது.
சென்ற ஆண்டு இதே இடத்தில் ஆளும் கட்சியால் நீர் மோர் பந்தல் 40 நாட்களுக்கு மேல் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஆனால் தற்போது தவெக சார்பில் நீர் மோர் பந்தல் அமைப்பதற்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. ஏனெனில் ஆளும் கட்சி தூத்துக்குடியில் தவெக வளர்வதை ஜீரணிக்க முடியாமல் நீர் மோர் பந்தல் அமைப்பதற்கு அனுமதி மறுக்கிறார்கள்.
முறையாக அனுமதி பெற்று இருக்கிறோம். ஏ.எஸ்.பி. யிடம் தற்போது பேசி இருக்கிறோம்.
சாலை மறியல் செய்ததற்கான காரணம் எங்களுடைய கட்சி பேனர்களை கிழித்து அகற்றி இருக்கிறார்கள். அதை கண்டித்து தான் சாலை மறியல் செய்தோம். இந்த இடத்தில் நீர் மோர் பந்தல் அமைப்பதனால் போக்குவரத்திற்கு இடையூறு என்று எங்களிடம் முறையான தகவல் தெரிவித்து இருந்தால் நாங்களே அகற்றி இருப்போம்.

தளபதி ஆணைக்கிணங்க மக்களோடு மக்களாக மக்கள் பணியை தான் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். மக்களுக்கு இடையூறாக எந்த செயல்களிலும் தவெக இதுவரை ஈடுபடவில்லை, கட்சி தொடங்கி 1 1/4 ஆண்டு எங்கள் மீது காவல் நிலையத்தில் எந்த புகாரும், எங்கள் கட்சி இளைஞர்கள் மீதும் இல்லை, எந்த நிகழ்ச்சி என்றாலும் மண்டபத்தில் நடத்தக்கூடிய நிகழ்ச்சி என்றாலும் காவல் நிலையத்தில் முறையான அனுமதி பெற்று தான் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம்.
எங்கள் கோரிக்கை என்னவென்றால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த இடத்திற்கு வர வேண்டும். உரிய காரணங்களை எங்களிடம் தெரிவிக்க வேண்டும். எத்தனை மணி ஆனால் பரவாயில்லை, பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நீர் மோர் குளிர்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கி பின்னர் தான் இந்த இடத்தில் இருந்து கலைந்து செல்வோம் என்று கூறினார்.
பின்னர் நீர் மோர் பந்தல் அமைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தயார் செய்து வைத்து இருந்த குளிர்பானங்களை பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மற்றும் தவெக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு வழங்கிய பின்னர் தவெக நிர்வாகிகள் கலைந்து சென்றனர். இதனால் அண்ணா பேருந்து நிலையம் முன்பு இரண்டு மூன்று மணி நேரமாக பதற்றமான சூழல் இருந்தது.
