தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை கட்டி ஆண்ட மாமன்னரும், இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 5-ம் தலைமுறை வாரிசுதாரர் வி.வி.ஜெ.எஸ். வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை நேற்று காலமானார்.
பாஞ்சாலங்குறிச்சியில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக நேற்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சென்று அன்னாரது பூத உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரது மறைவு வரலாற்று பாரம்பரியத்திற்கு ஏற்பட்ட பெரிய இழப்பாகும் என சங்கத்தினர் தெரிவித்தனர்.
அவரது இறுதிச் சடங்கு இன்று (4.03.2026) மாலை 4 மணியளவில் பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற்றது. இதில் பல்வேறு சமூக, அரசியல் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.