பொதுமக்களின் நலன் மட்டுமின்றி, எதிர்கால தலைமுறையினரின் நலனும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன், “போக்குவரத்து நெரிசலும் மாசுபாடும் இல்லாத தூத்துக்குடி”, “தூய்மையான குப்பைகளை முறையாகப் பிரித்து சேகரிப்போம்” என்ற தலைப்புகளில் மாநகராட்சிக் குட்பட்ட ராஜகோபால் நகர் பூங்காவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சி பகுதி எவ்வாறு இருந்தது, தற்போது கடந்த நான்கரை ஆண்டுகளில் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது, அடுத்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2040-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாநகராட்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்.
கடந்த கால நிலையை மக்கள் நலத்திட்டங்களாக மாற்றி, எதிர்கால வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறோம். நமது மாவட்டத்தில் வின்பாஸ்ட் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பல தொழிற்சாலைகள் வரவுள்ளன. அதற்கேற்ற வகையில் தேவையான கட்டமைப்பு வசதிகளையும் நாம் உருவாக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தைத் தொட்டுதான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 800 வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு மாநகரின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. முன்பு தூய்மைப் பணியாளர்கள் மூலம் வீடுதோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டு வகையாகப் பிரித்து சேகரிக்கப்பட்டு வந்தது.
தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மின்னணுக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுப் பொருட்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, பொதுமக்கள் இனி குப்பைகளை நான்கு வகையாகப் பிரித்து வழங்க வேண்டும்.
இந்த நடைமுறைக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளித்து, தூய்மைப் பணியாளர்களுக்கும் மாநகராட்சியின் தூய்மைப் பணிகளுக்கும் துணை நிற்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் நெகிழிப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பக்கிள் ஓடை மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் கொட்டப்படுவது ஓரளவு குறைந்துள்ளது. இருப்பினும், தற்போதும் சிலர் கழிவுகளை கால்வாய்களில் கொட்டி வருகின்றனர்.
யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. கால்வாய்களில் கழிவுகள் கொட்டப்படுவதால் அடைப்புகள் ஏற்பட்டு, மழைக்காலத்தில் மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் கழிவுநீர் செல்லும் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. “நம்ம தூத்துக்குடி; நமக்கும் பொறுப்புண்டு” என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். தூத்துக்குடியில் வி.இ. ரோடு, ஜெயராஜ் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கப் பட்டுள்ளன.
சாலைகளின் இருபுறங்களிலும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பேவர் பிளாக்குகள் பதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சாலையோர சிறு வியாபாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாநகராட்சி சார்பில் 10 ஆயிரம் பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கென குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டு தொழில் செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. என் டூ என் டூ சாலை அமைப்பின் மூலம் மாசுபாடு இல்லாத பகுதிகளை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகள் முதல்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐந்து அடி அகலம் மட்டுமே உள்ள குறுகலான தெருக்களிலும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பல்வேறு கட்டமைப்புப் பணிகள் முறையாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்ற திட்டமும் தொடங்கி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தின்போது, முன்கூட்டியே திட்டமிட்டு பணியாற்றியதால் 10 நாட்களுக்குள் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் சூழலை உருவாக்க முடிந்தது.
இதற்கு முன்பு மழைநீர் தேங்கி, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப குறைந்தபட்சம் 30 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. தற்போது பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் மூலம் சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி முன்னேறி வருகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் “என் குப்பை; என் பொறுப்பு” என்ற எண்ணத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறிவரும் பருவநிலைக்கு ஏற்ப மக்களுக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டி செயல் படுத்தி வருகிறோம்.
பொதுமக்களின் நலன் முக்கியம்; அதேபோல் எதிர்கால தலைமுறையினரின் நலனும் அவசியம் என்பதை மனதில் கொண்டு நானும், ஆணையர் பிரியங்காவும் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
இதுவரை மாநகராட்சி பகுதியில் 53 பூங்காக்கள் மேம்படுத்தப் பட்டு, தற்போதைய காலத்திற்கேற்ப பல்வேறு விளையாட்டு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் பூங்காக்களும் அமைக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் நடைபயிற்சி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் பூங்காக்களை பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர்.
மாநகராட்சியின் வளர்ச்சி மற்றும் தூய்மைப் பணிகளுக்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் பள்ளி மாணவ, மாணவியர் களுக்கான ஓவியப் போட்டியை தொடங்கி வைத்தனர்.
விழாவில் சுகாதார அலுவலர்கள் ராஜசேகர், ஹரிகணேஷ், ராஜபாண்டி, சுகாதாரக் குழுத் தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் பொன்னப்பன், சந்திரபோஸ், கனகராஜ், கந்தசாமி, ஜான், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்டச் செயலாளர் ரவீந்திரன், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.