தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை கட்டி ஆண்ட மாமன்னரும், ஆங்கிலேயரை எதிர்த்து வீரப் போராட்டம் நடத்தியவருமான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 5ஆம் தலைமுறை வாரிசுதாரர் வி.வி.ஜெ.எஸ். வீமராஜா எனப்படும் ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை (வயது முதிர்வு) நேற்று பிற்பகல் காலமானார்.
பாஞ்சாலங்குறிச்சியில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (3ம் தேதி) பிற்பகல் 1 மணி அளவில் இயற்கை எய்தினார். அவரது மறைவு பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பூதஉடல் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று (4ம் தேதி) மாலை 4 மணி அளவில் அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ் தெலுங்கு தேசியக் கட்சி நிறுவனத் தலைவர் ஈ.வி.எஸ். ராஜ்குமார் நாயுடு நேரில் சென்று, மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். “மாவீரர் கட்டபொம்மனின் பாரம்பரியத்தை தக்க வைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர் மறைந்தது வருத்தமளிக்கிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பல அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.