தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை கட்டி ஆண்ட மாமன்னரும், இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து வீரச் சமர் புரிந்து, பின்னர் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டு வீர மரணம் அடைந்த மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 5-ம் தலைமுறை வாரிசுதாரரான வி.வி.ஜெ.எஸ். வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை நேற்று காலமானார்.
பாஞ்சாலங்குறிச்சியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த அவர், உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வின் காரணமாக நேற்று பிற்பகல் சுமார் 1 மணி அளவில் இயற்கை எய்தினார். அவரது உடல் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு இன்று (4.03.2026) மாலை 4 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் திருப்பூர் ராமகிருஷ்ணன், மாநில அமைப்பாளர் பாஞ்சை கோபால் சாமி ஆகியோர் நேரில் வந்து பூத உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல், அருள்மிகு வீரசக்க தேவி ஆலய குழு கௌரவ தலைவர் மல்லுச்சாமி, ஆலய விழாக்குழு தலைவர், அருள்மிகு வீரசக்க தேவி ஆலய குழு விழா குழு தலைவர் வலசை கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மாவீரர் கட்டபொம்மனின் வாரிசு மறைவால் பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் துயரநிலை நிலவுகிறது. அவரின் மறைவு, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு மரபை பேணிக் காத்து வந்தவர்களுக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது.