தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை கட்டி ஆண்ட மாமன்னரும், இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு தூக்கிலிடப்பட்ட மாவீரருமான வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 5-ம் தலைமுறை வாரிசுதாரர் வி.வி.ஜெ.எஸ். வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை நேற்று காலமானார்.


பாஞ்சாலங்குறிச்சியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த இவர், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று பிற்பகல் சுமார் 1 மணி அளவில் இயற்கை எய்தினார். அவரது பூதஉடல் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


அன்னாரது இறுதிச் சடங்கு இன்று (04.03.2026) மாலை 4 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள அருள்மிகு வீரசக்க தேவி ஆலய குழு சார்பில் அவரது பூதஉடலுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது. ஆலய குழு நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.


மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சத்தைச் சேர்ந்தவராக விளங்கிய ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரையின் மறைவு பாஞ்சாலங்குறிச்சி பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.