தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மீளவிட்டான் செல்லும் சாலையில், சீனாவானா குளம் கரையோரமாக 2022–2023ஆம் ஆண்டில் சுமார் ₹2 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்பட்டது. 2,480 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்ட இந்த நடைபாதை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தை எம்பி கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், திட்டம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், நடைபாதையில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக்குகள் பல இடங்களில் உடைந்து சிதலமடைந்துள்ளன. சில பகுதிகளில் முழுவதும் பெயர்ந்து கிடப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கரையோரப் பகுதியில் பராமரிப்பு இல்லாததால் இருபுறங்களிலும் முள்செடிகள், புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தும் காணப்படுகின்றன. இதனால் அந்த பகுதி விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடமாக மாறியுள்ளதாக உள்ளூர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஒப்பந்தக்காரர் குறிப்பிட்ட காலம் வரை பணிகளை பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில், அவரிடமிருந்து பாதுகாப்புத் தொகை பிடித்துவைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியிருக்க, சேதமடைந்த நடைபாதை குறித்து மாநகராட்சி நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் கண்காணிப்பு இல்லாததே இந்த தரமற்ற பணிக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ₹2 கோடி மதிப்பிலான திட்டம் இரண்டு ஆண்டுகளிலேயே பயன்பாட்டிற்கு தகுதி இழந்துள்ளமை நிர்வாக அலட்சியத்திற்குச் சான்றாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: “₹2 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக அறிந்தேன். இரண்டு ஆண்டுகளிலேயே நடைபாதை சிதிலமடைந்திருப்பது மிகப்பெரிய நிர்வாக தோல்வி. பொதுமக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தரமின்மை வெளிப்படையாக தெரிகிறது.
உடனடியாக முழுமையான ஆய்வு நடத்தி, சேதமடைந்த நடைபாதையை மறு சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் சார்பில் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும், பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விதம், ஒப்பந்ததாரர் தேர்வு மற்றும் பணித் தரம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்.” இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் விரைவில் விளக்கம் அளிக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.