பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்த முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நேரடி வம்சாவளியான வி.வி.ஜெ.எஸ். வீமராஜா (எ) ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு ராஜா (87) அன்று (3-3-2026) மாலை 4.00 மணியளவில் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவரது மறைவு செய்தி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் பிரிட்டிஷ் படைகளால் தோற்கடிக்கப்பட்டு, பின்னர் கயத்தாற்றில் விசாரணை என்ற பெயரில் தூக்கிலிடப்பட்டார். அந்த வீரரின் வம்சாவளியைச் சேர்ந்தவராக தமிழக அரசின் மானியம் பெற்று வந்த வீமராஜா அவர்கள் எளிமை, தன்னடக்கம் மிகுந்த பண்பாளராக அறியப்பட்டார்.
அவரது மறைவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி கயத்தாற்றில் நடைபெறும் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்கச் செல்லும் போது வீமராஜா அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றதை நினைவுகூர்ந்து, அவரது குடும்பத்தினருக்கும் கட்டபொம்மன் வம்சாவளி கம்பளத்து மக்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
வீமராஜா அவர்களின் இறுதிச் சடங்கு அன்று (4-3-2026) மாலை 3.00 மணிக்கு பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், மறுமலர்ச்சி தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களின் சார்பில் இன்று அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கழக துணைப் பொதுச் செயலர் தி.மு. இராஜேந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ். இரமேஷ், வே. இரஞ்சன் மற்றும் மாநில ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் விநாயக ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அவரது மறைவால் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கட்டபொம்மன் வம்சாவளியினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.