தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மீளவட்டான் செல்லும் சாலையில் அமைந்துள்ள சின்ன கண்ணுபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் நேற்று முன்தினம் இரவு திடீரென இடிந்து விழுந்தது கவலைக்கிடமான சம்பவமாகும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:


இச்சம்பவம் இரவு நேரத்தில் ஏற்பட்டதால் அங்கு பயின்று வரும் சுமார் 30 குழந்தைகள் எந்தவித பாதிப்பும் இன்றி தப்பியிருப்பது பெரிய அதிர்ஷ்டமாகும். பகல் நேரத்தில் இந்த சம்பவம் ஏற்பட்டிருந்தால் பெரும் விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்பு இருந்தது.


2014ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அங்கன்வாடி மையம் கடந்த அக்டோபர் மாதத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருந்தும் மேற்கூரை இடிந்து விழுந்திருப்பது அதிகாரிகளின் அலட்சியத்தையும் கட்டிட பராமரிப்பு குறைபாடுகளையும் வெளிப்படுத்துகிறது.


எனவே, இடிந்து விழுந்த அங்கன்வாடி கட்டிடத்தை உடனடியாக ஆய்வு செய்து பாதுகாப்பான முறையில் சீரமைக்க அல்லது புதிய கட்டிடமாக அமைக்க வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அங்கன்வாடி மையங்களின் கட்டிடங்களையும் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


குழந்தைகளின் பாதுகாப்பில் எந்தவித அலட்சியமும் இருக்கக் கூடாது என சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.