தூத்துக்குடியில் இன்று நடைபெற உள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பெண்கள் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என மகளிர் சுயஉதவி குழு பெண்களை மிரட்டியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அந்த ஆடியோவில், கிராமப்புற ஊராட்சி கூட்டமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்துமாரி என கூறப்படும் ஒருவர் பேசும் குரல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில், “ஒவ்வொரு பஞ்சாயத்திலிருந்தும் ஒரு வேன் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு வேனில் குறைந்தது 25 பெண்கள் வர வேண்டும். காலை 8 மணிக்குள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் அனைவரும் வந்து விட வேண்டும்” என்று கூறப்படுவதாக உள்ளது.


மேலும், “வேனில் அழைத்து வரும் பெண்களுக்கு காலை உணவு வாங்கி கொடுப்பீர்களா, டீ அல்லது காபி வாங்கி கொடுப்பீர்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அனைவரும் கண்டிப்பாக வர வேண்டும். வராதவர்களை தலை முழுகி விட வேண்டியதுதான்” என்று கடுமையான வார்த்தைகளில் பேசப்பட்டுள்ளதாக அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.


இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடையே விவாதம் எழுந்துள்ளது. அரசியல் நிகழ்ச்சிக்காக மகளிர் சுயஉதவி குழு பெண்களை கட்டாயப்படுத்தியதாக கூறப்படும் இந்த விவகாரம் குறித்து உண்மை நிலை என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதற்கிடையில், அந்த ஆடியோ உண்மையா அல்லது மாற்றியமைக்கப்பட்டதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் தூத்துக்குடி அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.