தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவைகுளம் கிராம மீனவ மக்களின் நீண்டகால கோரிக்கையான மீன்பிடி துறைமுகம் மற்றும் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக, ரூ.150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் மற்றும் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 04.03.2026 அன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்ததை முன்னிட்டு தருவைகுளம் மீனவ சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர். இதில் தருவைகுளம் பங்குத்தந்தை வின்சென்ட், ஒன்றிய அவைத் தலைவர் மனோகரன், கிளைச் செயலாளர் பாஸ்கர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முடிவைதானேந்தல் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளும் தொடங்கிவைக்கப்பட்டன. ரூ.18.42 லட்சம் மதிப்பீட்டில் 1,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைதள நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி மற்றும் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும் முடிவைதானேந்தல் கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தன்னூத்து கிராமத்திலிருந்து சிறப்பு பணிகளின் மூலம் நிறைவுற்ற கூட்டு குடிநீர் திட்ட பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, சின்னதுரை, உதவி பொறியாளர் ரவி, ஒன்றிய கழக செயலாளர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர்கள் நாராயணன், ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி மாரிசெல்வம், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வசந்த், ஒன்றிய மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.