சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள மகளிர் பூங்கா (பிங்க் பார்க்) தூத்துக்குடியில் திறந்து வைக்கப்பட்டது.


தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு பகுதிக்கு உட்பட்ட 4டி ஹவுசிங் போர்டு காலனி 2வது தெருவில் புதிதாக உருவாக்கப்பட்ட மகளிர் பூங்காவை, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாநகராட்சி கணக்குக்குழு தலைவரும் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும், 3வது வார்டு திமுக கவுன்சிலருமான ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பெண்கள் பயன்பாட்டிற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ‘பிங்க் பார்க்’ பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன வசதியுடன் கூடிய இன்டோர் ஜிம், அவுட்டோர் ஜிம், ஓபன் ஏர் தியேட்டர் (OAT), வாக்கிங் டிராக், பேட்மிண்டன் தளம், பாஸ்கெட் பால் தளம் உள்ளிட்ட விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


மேலும் பெண்கள் யோகா பயிற்சி மேற்கொள்ள தனி வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா, பெண்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


திறப்பு நிகழ்ச்சியின் போது மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்று நட்டு பூங்காவை பார்வையிட்டு, அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் டிடிசி ராஜேந்திரன், மண்டல தலைவி அன்னலெட்சுமி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், திமுக செயல்வீரர்கள், கட்சி பிரதிநிதிகள் மற்றும் மகளிர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.