தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெறவுள்ள மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு விழா மற்றும் அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத்தின் 70வது ஆண்டு திருவிழாவில் அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என ஆலயக் குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னோடியான வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அரசு விழா மற்றும் ஆலயத் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இத்திருவிழாவின் 70வது ஆண்டு விழா மே 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழு சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த மனுவில், கடந்த காலங்களில் இந்த அரசு விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயரதிகாரிகள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்ததாகவும், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு குறைந்துள்ளதாக பக்தர்களும் பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆண்டு நடைபெறும் 70வது ஆண்டு விழாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விழாவின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தையும் புகழையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில், இந்த அரசு விழாவை மீண்டும் பழைய உற்சாகத்துடன் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆலயக் குழு வலியுறுத்தியுள்ளது.
இந்த கோரிக்கை மனுவில் ஆலயக் குழு தலைவர் எஸ்.வேலுச்சாமி (ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர்), செயலாளர் எம்.ஆதிசங்கர் மற்றும் பொருளாளர் பி.வரதராஜப் பெருமாள் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.