இந்திய அஞ்சல் துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கான ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’ துவக்க விழா இன்று காலை தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் (காமராஜ் கல்லூரி எதிரில்) நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் திட்டத்தைத் தொடங்கி வைத்து, பயனாளி குழந்தைகளுக்கு சேமிப்பு புத்தகங்களை வழங்கினார்.


முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். முதுநிலை அஞ்சல் துணைக் கோட்ட கண்காணிப்பாளர் ஹேமாவதி, தூத்துக்குடி திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், ஆய்வாளர் மீரா நாயகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை பொன் ராம்குமார் தொகுத்து வழங்கினார். அஞ்சல் துறை அதிகாரிகள், மகளிர் குழு பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.


102 பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு


நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது: “தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தின் சார்பில் பெண் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக என் தொகுதியில் உள்ள தாய்மார்களை இந்தத் திட்டத்தில் இணைக்க ஊக்குவித்து வந்தேன். பலர் நேரடியாக அஞ்சல் நிலையத்திற்கு சென்று கணக்கு தொடங்க முடியாத சூழ்நிலை இருந்ததால், அவர்களுக்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.250 செலுத்தி 102 பெண் குழந்தைகளுக்கு இன்று சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.


ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சேமிக்கலாம். தற்போது 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. 18 வயதிற்கு மேல் இந்தத் தொகையை கல்வி மற்றும் பிற தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். என் தொகுதியில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் உள்ள பெண் குழந்தைகளுக்கும் சேமிப்பு கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.


பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்


மேலும் அவர் கூறியதாவது: “பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரமும் அரசு அவர்களின் பெயரில் வைப்பு செய்கிறது. 18 வயதிற்கு பிறகு முழுத் தொகையையும் பெறலாம். முன்னதாக தாயின் வயது வரம்பு 40 ஆக இருந்தது. தற்போது 45 வயது வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமான வரம்பும் ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் வழங்கப்படாமல் இருந்த முதிர்வுத் தொகைகள் எங்கள் ஆட்சி வந்தவுடன் சுமார் 16 ஆயிரம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன,” என்றார்.


“பெண் குழந்தை பாரமல்ல”


“பெண் குழந்தையை பாரமாக எண்ணும் மனப்பான்மை மாற வேண்டும். அனைத்து குழந்தைகளும் சமம். பெண்களை கல்வியால் முன்னேற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். மகளிர் உயர்வே மாநில உயர்வாகும். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.30 லட்சம் வரை மானியக் கடன் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ரூ.37 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தை அனைத்து தாய்மார்களும் பயன்படுத்தி, குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்,” என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.


நிகழ்ச்சியின் முடிவில் பயனாளிகள் அமைச்சருக்கும் அஞ்சல் துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.