ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதிக்கு பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து முழுமையான அளவில் தாமிரபரணி தண்ணீரை திறந்து விடக் கோரி, ஸ்ரீவைகுண்டம் வடகால் கடைமடை பாய்மான விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடியில் இன்று காலை டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளுடன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி–நெல்லை நான்கு வழிச்சாலையில் புதுக்கோட்டை அருகே உள்ள தட்டப்பாறை விலக்கில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு குலையன் கரிசல் விவசாயிகள் சங்க தலைவர் ஹேம்நாத் ஜெகன், கூட்டாம்புளி தலைவர் பட்டு முருகேசன், சேர்வைக்காரன்மடம் தலைவர் தங்கதுரை, கோரம்பள்ளம் விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் சுந்தரபாண்டி, அத்திமரப்பட்டி–முள்ளக்காடு–முத்தையாபுரம் விவசாயிகள் சங்க தலைவர் பூபதி நாடார் மற்றும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.
டிராக்டர்கள் மற்றும் மாட்டு வண்டிகளுடன் நூற்றுக்கணக்கான விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தூத்துக்குடி யூனியன் முன்னாள் துணை சேர்மன் ஆஸ்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு, பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனப் பகுதியில் சுமார் 12 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால் போதுமான அளவில் தண்ணீர் திறந்து விடப்படாததால் பேய்குளம், பொட்டைக்குளம், கோரம்பள்ளம் குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் வறண்டு விட்டன.
இதன் காரணமாக சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களும் சேதமடைந் துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் கால்நடைகளுக்குக் கூட குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
கருகி வரும் பயிர்களை காப்பாற்ற உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், அதிகாரிகள் அளித்த உறுதியின்படி தண்ணீர் திறக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதற்கு முன்பு தூத்துக்குடி கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியும் கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் கடைமடை பகுதிகள் வரை முழுமையான பாசன வசதி கிடைக்காமல் பயிர்கள் தொடர்ந்து வறட்சியால் கருகி வருவதாகவும், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வேதனையில் உள்ளதாகவும் கூறினர். எனவே தமிழக அரசு உடனடியாக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தேவையான அளவு தண்ணீரை திறந்து, கடைமடை பகுதிகள் வரை முழுமையான பாசன வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சாலை மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி ஏ.எஸ்.பி. சஞ்சித் நாயர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக தூத்துக்குடி–நெல்லை பிரதான சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பேருந்துகள், லாரிகள் மற்றும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.