தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் வடகால் கடைமடை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்காக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.




இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் காவல் துறையினர் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ. தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் கூறியதாவது:



விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் காவல்துறையினர் கடுமையான அணுகுமுறையை மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளை அடக்குமுறையின் மூலம் கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.



பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பான விவசாயிகளின் கோரிக்கையை அரசு உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்னைக்கு தீர்வு காண்பதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தால், அதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விவசாயிகளிடம் நேரடியாக விளக்க வேண்டும்.



விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதுதான் ஜனநாயக நடைமுறை. அதற்கு மாறாக காவல்துறையை பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்குவதும், கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதும் ஏற்றுக் கொள்ள முடியாது.



எனவே, விவசாயிகளின் கோரிக்கையை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு, வடகால் கடைமடை பாசனப் பகுதிக்கான தண்ணீர் பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.