தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி மற்றும் காலபைரவர் சித்தர் பீடத்தில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு நடைபெற்ற மஹா யாகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் குறித்து “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு உலக மக்கள் அமைதியாகவும் நலமாகவும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் சித்தர் பீடத்தில் மஹா யாகம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும், மனிதர்கள் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த யாக பூஜைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் உலகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று கொண்டு இருக்கும் யுத்தங்கள் முடிவுக்கு வந்து உலகம் அமைதி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த மஹா யாகமும் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். சுமார் 9 அடி உயரத்தில் எழுந்தருளியுள்ள மங்களம் தரும் சனீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் யாகங்கள் நடத்தப்பட்டதாகவும், உலகம் செழிக்கவும் மனிதர்கள் நல்லபடியாக வாழவும் சனீஸ்வர பகவானின் அருள் கிடைக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம் எனவும் அவர் விளக்கினார்.
அரசியல் குறித்து பேசுகையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும், ஜோதிடக் கணிப்பின் படி தற்போது ஆட்சி செய்து கொண்டு இருப்பவர்களே மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என சூட்சமாக தெரிவித்தார். அதே நேரத்தில் நடிகர் விஜய் வருகின்ற தேர்தலில் அதிக வாக்கு வங்கியை பெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், அந்த ஆதரவை அடிப்படையாகக் கொண்டு அடுத்தடுத்த தேர்தலில் முதலமைச்சராக உயரக்கூடிய சூழல் உருவாகும் என்பது ஜோதிடக் கணிப்பாக இருப்பதாகவும் சற்குரு சீனிவாச சித்தர் கூறினார்.
இந்த சனிப்பெயர்ச்சி விழாவில் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு மஹா அன்னதானமும் வழங்கப்பட்டது. சனிப்பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வர பகவானை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சித்தர் பீட நிர்வாகம் செய்திருந்தது.