தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து கோடைகால விடுமுறையை குழந்தைகள் பயனுள்ளதாக அறிவு பயணமாக மாற்றுவதற்கு மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு என்று "ஏனென்று கேள்" என்ற அறிவியல் பயிற்சி முகாம் மே 3ம் தேதியான இன்று மாலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது.
இந்த அறிவியல் பயிற்சி முகாமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தொடங்கி வைத்து பேசும்போது முகாமின் முதற்கட்டமாக, பின்வரும் தலைப்புகளில் பயிற்சிகள் நடைபெறும்.
கணக்கும் இனிக்கும்
கைகளில் கண்ணாம் பூச்சி
அறிவியல் பரிசோதனைகள்
ஒரிகமி
கற்பனையும் கைத்திறனும்
பொம்மலாட்டம்
பலூனில் பொம்மைகள்
மந்திரமா தந்திரமா
அறிவியல் கோமாளி
அறிவியல் ஆனந்தம்
கதை சொல்வோம், கதை உருவாக்குவோம்
விளையாட்டை கற்போம்
நம்புவீர்களா?
மேலும், சதுரங்க பயிற்சி தினமும் மாலை 5.30 முதல் 6.30 மணி வரை சிறந்த பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலுடன் நடத்தப்படும். அறிவியல் பூங்காவில் உள்ள அனைத்து அறிவியல் சாதனங்கள் பற்றிய விளக்கங்கள், தினசரி அறிவியல் வல்லுனர்களால் வழங்கப்படும். மாணவர்களில் “ஏன்?” என்ற கேள்வி எழும் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இம்முகாம் செயல்படுத்தப்படுகிறது.
இன்று (சனி) மற்றும் நாளை (ஞாயிறு) ஆகிய இரண்டு தினங்களில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை, அறிவியல் மற்றும் குழந்தைகள் விரும்பும் திரைப்படங்கள் மினி திரை காட்சி முறையில் திரையிடப்படும். அதனைத் தொடர்ந்து Film Critics மாணவர்களிடம் படத்தின் அறிவியல் சார்ந்த உள்ளடக்கங்களை விளக்கி உரையாடல் நடைபெறும்.
பெற்றோர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின் அறிவியல் திறனையும், ஆர்வத்தையும் ஊக்குவிக்கச் செய்வது, அவர்களது எதிர்கால அறிவியல் பயணத்திற்கு ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மேயர் ஜெகன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், உதவி ஆணையர் சுரேஷ்குமார், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் முனைவர் சாந்தகுமாரி, அரசு அலுவலர்கள், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பெற்றோர்கள், குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர்.